Sep 18, 2006

உள்ளூரத்தேடிய உணர்வுகள்





இப்போதெல்லாம்

உள்ளிருக்கும் உயிர்வரை

உற்று -

இயல்பு சிறிதும் பிறழாமலே

உற்று உற்று

நோக்கிடினும்

உண்மைகள்

புரிவதில்லை



என் மனவெளியின்

ஒற்றையடிப்பாதையில்

ஓராயிரம்

ஆண்டுகளாய் பயணித்தும் - மன

வெளிச்சம் காண இயலவில்லை



அருந்துகிற நீர்

நிச்சலனத்தினூடேயும

நித்தமும்

நித்திரைத் தருணங்களிலூடேயினும்

என்னுடம்பில் - ஒட்டுவதில்லை



என் சுவாசக்காற்று

என்னுள் - சுதந்திரமாக

சுற்றுத்திரிந்திடினும்

உயிரை உண்மையோடு

உரசுவதில்லை



கண்ணிமை கூட

அதன் உள்ளூரத் -

தூங்காதென் கண்களை

தொட்டுத்தழுவுவதில்லை



ஆன்மாவின் ஆதிக்கமற்ற

அந்தரங்கங்களை

என் சிந்தையெங்கிலும்

சேதாரத்தோடு சிந்திய -

மிச்சங்களாகக்கூட

சேமிக்க முடியவில்லை



எனக்குள்ளே - எங்கெங்கு

நோக்கினும்

எட்டுத்திசை எழுகடலென்று

உள்ளூரத்தொலைந்து

உன்மத்தம் பிறழ்ந்து

திரிந்திடினும்

நான் யாரென்ற

நமத்துப்போன நிந்தனைகள்

எனக்கே புரிவதில்லை

No comments: