Sep 1, 2014

- பெரும்பூகம்பங்கள் -

என்றென்றோ 
பொங்கலுக்கும் 
தீபாவளிக்கும் 
 தவமாய்த்
தவமிருந்து பெற்ற  சொற்ப 
விடுமுறை 
மணித்துளிகளை 
சொந்த ஊரில் 
கொண்டு சேர்த்த கணத்தில் 
அங்கிங்கெனாதபடி 
எட்டுத்திக்கிலிருந்து 
பதுங்கிப்பாயும் 
பணத்தேவைகள் 
அப்பொக்கிச மணித்துளிகளை 
அப்படி அப்படியே  
கொள்ளையடித்த  
வன்கொடுமைகளைத்தான் 
என் மன தேசத்தில் 
இடையறா நிகழும்  
பெரும்பூகம்பங்கள் என்பேன்!
பெரும்பூகம்பங்கள் என்பேன்!

-

வேடிக்கை மனிதர்



எங்கோ
எங்கெங்கோ
தூரதேசங்களில்
துயரதேசங்களில்
உறவு துறந்து
சுற்றம் தவிர்த்து - செல்வம்
ஒன்றெ ஒற்றைத்
துணையென  - மாயைப்
பொருலுலகினைச்
சுற்றிச்சுழலும்
தேசநலம் அற்ற
தன்னலவாதிகளைப் 
பாரீர் பாரீர் என 
நித்தம் தூற்றித் திரியும்
பேதைகள் யாரென
உற்றுப் பார்த்தால் தெரியும்


தாம் பிறந்து
வளர்ந்து சுகித்த
மண்ணைவிட்டு
ஊருக்குதவாமல்
தொலைதூர
பெருநகரங்களில் - அதன்
காங்க்ரீட்காடுகளில்
மனிதம் மறந்து
மனம் பொசுங்கி
தன்னகமெங்கிலும் 
பொறாமை போற்றி 
உள்ளத்தனைய உயர்ந்தோரை 
தூற்றித்தூற்றித்
திரியும் சில
வேடிக்கை மனிதர்கள்தாம்
அவர்கள் என.