Sep 27, 2014

வாழ்வியலின் சூத்திரம்




ஆசிரியர்கள் பலர் 
புத்தி சொல்லியும் 

நன்னெறி நூல்கள் 
நலம்பட உரைத்தும் 

நல்லோர் பலப்பல காலம் 
பகுத்தறிவூட்டியும் 

இதிகாசங்கள் 
இடித்துரைத்தும் 

காதலி கசிந்து 
உருகிக்கேட்டும் 

திருந்தாத 
திருந்தவே திருந்தாத 
என் மனம் 

என் குழந்தைச்செல்லம் 
குற்றம் சுட்டி 
அழகென 
அதட்டி  மிரட்டியதும் 

ஞான மின்னல்கள்  பல 
புத்திக்குள் ஊடுருவி 
ஆன்மாவின் அங்கங்களை உலுக்கி 
என்னை முக்தியாக்கியதே!

ஏ இயற்கை பிரம்மமே 
எங்கு போய் 
வாழ்வியலின் சூத்திரத்தை 
சூட்சுமமாய் 
ஒளித்து வைத்தாய். 

சூத்திரத்தின் பாத்திரமாய் 
உன்னையே எனக்குள் 
முழுமுதலாய் 
தெரிய வைத்தாய் !
தெளிய வைத்தாய் !!


நான் எழுதுவது கவிதை இல்லை!




சிந்தனைச் சத்தின்றி 
வெற்று 
வார்த்தை 
ஜாலங்கள் கொண்டு 

அடுக்கு மொழி 
சொற்றொடர்களால் 
கண்ணாமூச்சி நடத்தி 

கன்னியர் கவர 
அபத்தங்களால் 
தமிழை நிரப்பி 
தமிழைத் தரகு மொழியாக்கி 

போகப்பொருளாய் தமிழ் 
விற்றுப் போசிக்கும் 

கவிதை போன்ற ஒன்றை 
கவிதையே இல்லாத ஒன்றை 
கவிதையென படைத்தும் 
கவி கவி என சிலாகித்தும் 

திண்ணைப் பேச்சை 
திகட்ட திகட்ட இனிப்பூட்டி 
இலக்கிய கவிதையென  போற்றும் 

இப்பேதையர்தம் 
படைப்புக்கள்தான் 
தமிழ்கூறும்கவிதை என்றால் 
நான் எழுதுவது கவிதை இல்லை!
நான் கவிதை எழுதுவது இல்லை!!

தெரிந்தது புல்லளவு






நுண்ணியிர்கள் நாங்கள் 
எம் உலகு 
ஒரு பிரமாண்டமான 
நீர்க்கடல் - பனித்துளி 
என்று அதற்கொரு பெயரும் உண்டு.

எம் 
உலகமான பனித்துளி  
வீற்றிருப்பதோ 
நுனிப்புல் எனும் 
அண்டவெளியில் 

புல்வெளிதான்   
எம் பிரபஞ்ச வெளி 
யாமே இந்த ஜகத்தினை 
ஆட்சி செய்யும் 
உயரிய பிறவிகள்.

நுண்ணியிர்கள் நாங்கள் 
எம் உலகு 
ஒரு பிரமாண்டமான 
நீர்க்கடல் - பனித்துளி 
என்று அதற்கொரு பெயரும் உண்டு.