சங்கக்காப்பியங்கள் மங்காக்
களிப்புடன் கூற்றுவது யாதெனக்காணீர்
தைஇத் திங்கள் தண்கயம் போல்என
புறநானூறுபுகழ்ந் துரைத்ததும்
தைஇத் திங்கள் தண்கயம் படியும்என நற்றிணை நவின்றதும்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்என குறுந்தொகை குறிப்பறிந்ததும்
தையினீ ராடிய தவந்தலைப் படுவயோயென கலித்தொகை கவிபாடியதும்
யாதொன்றைக் கட்டியம் கூற்றுகின்றன எனக்காணீர்!
வெய்யோனவன் வடக்கே வலம் பெயர்வதை வானியலறிவால் கணித்து
பெய்யெனப்பெய்த்த பொய்யாத மாமழைப் பருவங்களையுணர்ந்து
வையத்தையே
வளம்செழிக்க வாழ்வாங்கு வாழவைத்த இயற்கையை
தைத்திங்களில்
வழிபட்டு வணங்கி விண்ணிற்கும்,
மண்ணிற்கும்,
உழவிற்கும்
உழுத
கால்நடைகளுக்கும் நன்றி நவிழும் அறிவியல்சார் நாகரீகம்தனை
உலகிற்கே
எடுத்தியம்பியது தைப்பொங்கல் கண்ட தொல்தமிழேயெனக்
கவின்மிகு
காப்பியங்கள் கட்டியம் கூற்றுவது காணீர்!
புவியெங்கும்
புகழ்மணந்த பூம்புகாரில்
இந்திர
விழாவெனஇத் தைத்திருநாளை
முக்காலமும்
முரசறைந்துத்
திக்கெங்கிலும் தொங்கும் தோரணத்தால்
திருவிழாக்கோலம்
தரித்து
கவிபாடி
களமாடி - நம்மனதினைக்
களவாடிக் களிப்புற்றதைச்
சீர்மிகு சிலப்பதிகாரத்தின்வழி நாம்
காண்பதுமித்
தைப்பொங்கலே!
கீழடியில்
கண்டெடுத்த சுட்டபானை
உத்திரமேரூரின் உயரிய கல்வெட்டு
ஆதிச்சநல்லூர்
அகழ்வாராய்ச்சிப் பொருட்கள்
கொற்கையின் தமிழ்த்தொன்மங்கள்
புதையுண்ட
பூம்புகாரின் பொக்கிடங்கள்
இவையனைத்தும்
இசைபட இயம்புவது
ஆயிரமாயிரம்
ஆண்டுகளாய்
ஈர்த்தெம்மை
ஆட்கொண்ட
அருந்தமிழணங்கின்
கலாச்சாரச்
சின்னங்கள்
அல்லவா - அக்கலாச்சாரத்தில்
அன்றே
ஆங்கே சித்தமெலாம் சிறந்திருந்தது
தைப்பொங்கல் போற்றிடும் பைந்தமிழ்ப்
பண்பாட்டிலக்கியங்கள்
அல்லவா?
கூர்
கொண்டதன் கொடுங்கொம்பு சிலுப்பி
வீறுகொண்டு
ஏறு காடுகொள்ளாது
சீறிச்சினந்து
வீரமறவனைக் - கொம்பால்
கீறி
உழுது அவன் குருதி கண்டிடுமுன்
வீழ்ச்சி
காணா வீரனவன்தோள் தினவெடுக்க
ஏற்றினின்
எழுச்சிதனை அச்சம் மிச்சமின்றி
அடக்கியாளும் ஆண்மகனையே ஆட்கொண்டு - தம்
காதலையும்
வீரத்தையும் கடைக்கண்ணாலே
விதைத்திடும்
வஞ்சியர்கள் வாழ்த்தி வாழ்த்தி
வரவேற்றிடும்
பொங்கலே தைப்பொங்கல்!
அண்டை
அந்நியரிடத்தில் ஆண்டுகள்பல
அடிமைத்தளையில்
அழற்றிக்கிடந்தாலும்
பாட்டன்
முப்பாட்டன் எந்தையும்
தமிழ்மூச்சு தணியாது தமிழ்ச்செருக்குடன்
பொங்குபல
கலைகளுடன் - இவ்வையகத்தே
வான்புகழ்
கொண்டு செந்தமிழ்தனின்
செழுமிகு
நாகரீகத்தைப் பல்லாண்டு
பொங்கலாகக்
கொண்டாடி மகிழ்ந்தனர்
அய்யகோ
இன்றோயிங்கு திக்குத்தெரியாது
தன்சுய
மறியாது ஆண்டாண்டுகளாய்
கிடந்து
தொலைந்த இத்தலைமுறை
நித்திரையிலிருந்து அவ்வப்போது
அரைகுறையாய் விழிப்பதால்
உழவும்
உயிர்வாட உழன்று கிடக்கிறது
கலாச்சாரங்கள்
கேட்ப்பாரற்று கிடக்கிறது
பைந்தமிழ்
பண்பாட்டுப்பயிர் வாடி வதைகிறது
பால்கெட்டு பொங்காத பொங்கலாய் - வாழ்(வு)
வளங்கெட்டு பொசுங்கிக் கிடக்கிறது
பைந்தமிழின் பொங்குபல காப்பியங்கள்
புவியெங்கும் போற்றிப் புகழ்ப்பாடிய
காலங்கள்
மறைந்தாலும்
செந்தமிழின்
சீர்சிறப்பினை தமிழர்பலர்
தன்னிலையற்றுத்
துறந்தாலும்
முந்தைக்குமுந் தையதாய் விளைந்து
பிந்தைக்குபிந் தையதாய் செழிந்து
அன்றும்
இன்றும் என்றுமே
விளங்கிடும்
அருந்தமிழை
அடுத்தடுத்த
தலைமுறைகளுக்கு
கொணர்ந்து
சேர்க்க உறுதி பூணுவோமே!
அன்றும்
இன்றும் என்றும் - தீஞ்சுடர்
மங்காச்சூரியன்
போல் பூவுலகில்
காற்றுள்ள வரை
தமிழ்ப்பண்பாட்டை
என்றென்றும்
தலைசிறக்கச்
செய்குவோமே!
பொங்குக
பைந்தமிழ் பொங்குக நற்றமிழ்!
பொங்கலோ
பொங்கல்!!
ப.செ.
(முனைவர் ப. செந்தில்குமாரன்